குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் குமரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே
மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பது, மக்களிடையே
அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
காரணமாக, கன்னியாகுமரி உட்பட ஏழு மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும்
என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை
வானம் வாரி வாரி வழங்கியதில், 12 நாட்களாக பல மாவட்டங்களில் வெள்ளப்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பல குடியிருப்பு பகுதிகள்
வெள்ளத்தில் மூழ்கி, ஒரு வாரமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மழை
ஓய்ந்தாலும் வெள்ள நீரில் கழிவு நீர் கலந்துள்ளதால், நோய் பரவும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மீண்டும் மழை வெள்ளம் ஏற்படுமோ என மக்கள்
அஞ்சும் வகையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
உருவாகியுள்ளது.
கடல் சீற்றம்
இதுகுறித்து,
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் நேற்று அளித்த
பேட்டி:தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில்,
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிஉருவாகியுள்ளது.இந்த தாழ்வுப்பகுதி,
நாளை முதல் இரண்டு நாட்களுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின், ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும். அப்போது, தமிழக கடற்பகுதிகளில் கடல்
அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.
வரும் 16, 17ம் தேதிகளில், மத்திய
மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ.,
வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள்அந்தப் பகுதிகளுக்கு
செல்ல வேண்டாம். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் சென்னை
உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு கன மழை உள்ளிட்ட பாதிப்பு இருக்காது. ஆனால்,
தரைக்காற்றின் தாக்கம் இருக்கும்.தற்போதைய நிலையில், காற்றழுத்த தாழ்வு
பகுதியானது மண்டலமாக வலுப்பெறும்; புயலாக மாற வாய்ப்புகள் குறைவு தான்.
தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
எச்சரிக்கை
தமிழக
வட மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
நிலவுகிறது.அதனால் இன்று, நீலகிரி, சேலம், திண்டுக்கல், தேனி
மாவட்டங்களில் கன மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி
மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்.
அரபிக்கடலில் இருந்து தரைக்காற்று
வேகமாக வீசுவதாலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில்
மிக கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில
இடங்களில் மிதமான மழை பெய்யும்.
நாளை தேனி, திண்டுக்கல்,
கோயம்புத்துார், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன
மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.இவ்வாறு அவர்
கூறினார்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில்
அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் பகுதியில் 14 செ.மீ., மழை
பதிவானது.
இயல்பு அளவை மிஞ்சிய சென்னை!
சென்னை
வானிலை மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:இந்த மாதத்தில் நேற்று வரை
சராசரியாக ௧௦ செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், இரு மடங்காக 20 செ.மீ.,
பெய்துள்ளது. சென்னையில் 25 செ.மீ., மழை பெய்ய வேண்டும்; ஒன்றரை மடங்கு
அதிகமாக 61 செ.மீ., பெய்துள்ளது.
அக்டோபர் முதலான இந்த பருவமழை
காலத்தில், நேற்று வரை தமிழகத்துக்கு சராசரியாக 27 செ.மீ., மழை கிடைக்க
வேண்டும். அதற்கு பதில், 55 சதவீதம் அதிகமாக 42 செ.மீ., பெய்துள்ளது.
சென்னைக்கு 47 செ.மீ., கிடைக்க வேண்டும்; 74 சதவீதம் அதிகமாக 82 செ.மீ.,
கிடைத்துள்ளது.
டிசம்பர் வரையிலான இந்த பருவ காலம் முழுமைக்கும்,
சென்னைக்கு மொத்தமாக 78 செ.மீ., மழை தான் கிடைக்க வேண்டும். ஆனால், பருவ
கால இயல்பு அளவையும் தாண்டி மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment