மாணவர்களோடு கைகோர்ப்போம்: அண்ணாமலை! - Padasalai.Org

No.1 Educational Website

மாணவர்களோடு கைகோர்ப்போம்: அண்ணாமலை!

 


கொரோனா அச்சம் சிறிது சிறிதாக அகன்று வரும் சூழலில், தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கல்லுாரிகளில் வாரத்தில் மூன்று நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


'ஆன்லைன்' தேர்வு

இந்தச் சூழ்நிலையில், கல்லுாரி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, கல்லுாரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல ஊர்களிலும், 'ஆன்லைன்' தேர்வு நடத்தக் கேட்டு மாணவர்கள் போராடி வருகின்றனர். இது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள், கல்லுாரிகள் ஆன்லைன் வாயிலாக, மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தின.மூன்று செமஸ்டர்கள் வரை, மாணவர்கள் முடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் குறைந்ததும், கல்லுாரிகள் திறக்கப்பட்டு உள்ளன. நவம்பர் மாத துவக்கத்தில் இருந்து தான், கல்லுாரி படிப்பு நேரடியாக நடக்கிறது.
இந்த செமஸ்டரின் பெரும்பாலான வகுப்புகள், ஆன்லைன் வாயிலாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், திடீரென நேரடி தேர்வு நடத்தப்படும் என, கல்வி துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தங்களுக்கு பாதிப்பு இருக்கும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இறங்கிஉள்ளனர். உடனே, வழக்கு போட்டு மாணவ சமூகத்தை அரசு அச்சுறுத்துகிறது.
கடந்த ஆட்சி காலத்தில், மாணவர்கள் நேரடி வகுப்பில் தான் படிக்க வேண்டும் என, அரசு முடிவெடுத்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தி.மு.க.,வும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் தான். அப்போது, ஆன்லைன் வகுப்பு தான் நடத்த வேண்டும் என்று கூறியவர்கள், இப்போது நேரடி வகுப்பு தான் சரி என்று கூறுவது சரியல்ல.


நல்ல முடிவு

எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அரசை எதிர்க்க எதை வேண்டு மானாலும் சொல்வதும், செய்வதுமாக இருந்து விட்டு, ஆட்சிக்கு வந்ததும் மாறுவது என்பது, அரசியல் மோசடித்தனம். ஒரு முடிவு எடுக்கும் போது, அது தொடர்பான சாதக, பாதகங்கள் குறித்து, மாணவர்களிடமோ, மாணவ பிரதிநிதிகளிடமோ கருத்து கேட்டு, அதையும் பரிசீலனைக்கு எடுத்து இருக்க வேண்டும்.
அப்படி எதுவும் செய்யாமல், அரசு தன்னிச்சையாக செயல்பட்டதன் விளைவு தான், மாணவர்கள் போராட்டம். இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.தமிழக அரசு, 'ஈகோ' பார்க்காமல், தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து, மாணவ பிரதி நிதிகளை அழைத்துப் பேச வேண்டும். அவர்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும். அதை வைத்து, ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
மாணவர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில், தமிழக பா.ஜ.,வுக்கு எப்போதும் அக்கறை உண்டு. தேவையானால், இந்த விஷயத்தில், மாணவர்களோடு கைகோர்த்து செயல்படவும் தயார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


'சம்பளம் கொடுக்க பணம் இருக்காது'


பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இந்திய மகளிர் கூடைப்பந்து அணி தலைவி அனிதா பால்துரைக்கு, தமிழக பா.ஜ., சார்பில் பாராட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அனிதா கவுரவிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து, அனிதா கார் வாங்குவதற்கு, தமிழக பா.ஜ., சார்பில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அண்ணாமலை அறிவித்தார்.
பின், அண்ணாமலை அளித்த பேட்டி:மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும்; டீசல் 5 ரூபாயும் குறைந்தது. அதை பின்பற்றி, பல மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன.ஆனால், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தெரிவித்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி, ஆட்சிக்கு வந்திருப்பது உண்மையாகி விட்டது.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிதம்பரம், பெட்ரோல், டீசல் விலை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அவரே விலை உயர காரணம்.தமிழக கடன் சுமை எவ்வளவு என்று தெரிந்து தான், தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. தற்போது, தமிழக அரசின் கடன் சுமை 5.10 லட்சம் கோடி ரூபாய்.இந்த ஆண்டு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது.
ஒரு மாநிலம், அதன் மாநில மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் தான் கடன் வாங்க முடியும். இந்த அளவு அடுத்த ஆண்டு எட்டப்படும். இதே நிலை தொடர்ந்தால், 2023ல் அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கொடுக்க, அரசிடம் பணம் இருக்காது. பா.ஜ.,வின் ஏழு ஆண்டு ஆட்சியில் தான் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது; வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஊழல் இல்லாத மற்றும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!